டெல்லி: ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். வரும் 20ம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20, 21ந்தேதி பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் உள்பட பலரை சந்திக்கும் நிலையில், ஜி20 அமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா தற்போது 2023 ஆம் ஆண்டிற்கான 20 பொருளாதாரங்களின் குழுவின் தலைவராக உள்ளது. இந்த ஆண்டு  ஜி7 மற்றும் ஜி20 ஆகிய அமைப்புகளின் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.   இந்நிலையில், வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை தருகிறார்.

இந்தப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கார் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.  இந்த சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆலோசனை நடத்துகிறார். இரு தரப்பும் பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள்.  மேலும்,  G7 மற்றும் G20 தலைவர்களுக்கான முன்னுரிமைகள் குறித்தும் விவாதிப்பார்கள்.

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில்,  ஜப்பான் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் கூட்டத் தொடர் காரணமாக ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி  பங்கேற்க முடியாத நிலையில், அவரும் அந்நாட்டு பிரதமருடன் இந்தியா வருகை தருகிறார். மேலும் அதிகாரிகள் குழுவினரும் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.