கனகபுரா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக்-கை எதிர்த்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவகுமார், அசோக் போட்டியிடும் மற்றொரு தொகுதியில் தனது சகோதரர் டி.கே. சுரேஷை களமிறக்க திட்டமிட்டுள்ளார்.
பெங்களூரு பத்மநாபநகர் தொகுதியில் இருந்து 2018 தேர்தலில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க்பட்ட அசோக் இம்முறை டி.கே. சிவக்குமாரை எதிர்த்து கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
பத்மநாபநகர் தொகுதியில் அசோக்கிற்கு செல்வாக்கு உள்ள நிலையில் கனகபுராவில் சிவக்குமாரை தோற்கடிக்கும் நோக்கில் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் பத்மநாபநகரில் போட்டியிட ரகுநாத் ரெட்டிக்கு டிக்கெட் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கான பி-படிவத்தை வழங்காமல் வைத்திருக்கும் டி.கே. சிவக்குமார் அந்த தொகுதியில் டி.கே. சுரேஷை நிறுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கை உறுதிப்படித்திக் கொள்வதோடு அசோக்-கிற்கு அவர் போட்டியிடும் இரண்டு தொகுதியிலும் கடும் போட்டியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.
டி.கே. சிவகுமாரின் ஆதரவாளரான ரகுநாத் ரெட்டி சிவகுமாரின் இந்த முடிவுக்கு ஆதரவளித்திருப்பதுடன் டி.கே. சுரேஷின் வெற்றி்க்காக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தெடு்க்கப்பட்ட ஒரே மக்களவை உறுப்பினரான டி.கே. சுரேஷ் பத்மநாபநகர் தொகுதியில் அசோக்கை எதிர்த்து களமிறங்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.