கான்பூர்: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது குறித்து கான்பூர் தபால் துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்திய தபால் துறையில் தங்களது வாடிக்கையாளர்களுக்கென மை ஸ்டாம்ப் (My STAMP) என்ற திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலம் மறைந்த தலைவர்கள், சாதனையாளர்கள் உருவங்கள் மட்டும் தபால் தலைகளில் பொறிக்கப்படுவது மட்டுமல்லாமல், சாமானிய நடுத்தர மக்களும் தங்களது உருவம், மற்றும் தங்கள் தயாரிப்பு பொறிக்கப்பட்ட தபால் தலைகளை தலைமை தபால் நிலையங்களில் விண்ணப்பித்து பெறலாம்.

இந் நிலையில், பிரபல தாதாவான சோட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் உருவம் பொறித்த தபால் தலைகள் கான்பூர் அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கான்பூர் அஞ்சல்துறையான தமது விசாரணையை துவக்கி இருக்கிறது.

இது குறித்து கான்பூர் தபால் நிலைய அதிகாரி ஹிமான்சு மிஸ்ரா கூறுகையில், தமக்கு தெரியாமல் இது போன்ற அஞ்சல் தலை வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் மை ஸ்டாம்ப் தயாரிக்க அஞ்சல் துறை வசதியை வழங்குகிறது. ஆனால் இதுபோன்ற தவறுகள் நேராத வண்ணம் எங்கள் ஊழியர்கள் படங்களை கவனமாக சரிபார்க்க இருக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.