தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் காரணமாக தினசரி சிறப்பு அபிசேகம், வெள்ளிப்பல்லக்கில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும்  முருகன் கோவில்களில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில்  முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபாட்டால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தி விழாவானது  தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி கந்த சஷ்டி விழா எளிமையாக நடைபெற்ற நிலையில், இந்த வருடம் மீண்டும் களைகட்டி உள்ளது. கந்த சஷ்டி விழா தொடக்கா நாளான  இன்று யாகசாலை பூஜையுடன்  விழா தொடங்கியது-  காலை 7.30 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து,. கோயிலில் உள்பிரகாரத்தில் ஜெயந்திநாதருக்கு பூஜை தொடங்கி, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் 12.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்று, ஜெயந்தி நாதர் சண்முக விலாஷ் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

இன்று சூரியகிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. பின்னர் 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடை திறந்ததும்,  தொடர்ந்து சுவாமி-அம்பாள்கள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடத்தப்பட்டு, வெள்ளி சப்பரத்தில் ஜெயந்தி நாதர்  எழுந்தருளி கிரி வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.   பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த முறை தங்கத்தேர் கிரிவலம் இருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. 31ஆம் தேதி இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது.

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறும் 30-ம் தேதி  கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை உள்பட அனைத்து முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் முருகன் கோவில்களில் குவிந்துள்ளனர். 6 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் விரதத்தை முடித்துக்கொள்வார்கள். திருக்கல்யாணத்தை தரிசனம் செய்த பின்னர் வீடு திரும்புவார்கள்.