சென்னை: ‘டாஸ்மாக் இலக்கு’ என்று செய்தி வெளியிட்ட  தந்தி தொலைக்காட்சிமீது வழக்கு தொடரப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல் விடுத்துள்ளார். இது ஊடகத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் முக்கிய வருவாய்களில் டாஸ்மாக்  மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயே முதன்மையானது. தமிழகத்தில் உள்ள நிதி நெருக்கடி, இலவச அறிவிப்புகள் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்ய மதுவிற்பனையால் கிடைக்கும் வருமானமே முதன்மையாக உள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பட்டி தொட்டி முதல் நகரங்கள் வரை எங்கு நோக்கிலும் மதுபானக்கடைகள் ஆக்கிரமித்து வருகின்றன. தமிழ்நாட்டை ஆளும் திராவிட கட்சிகள் மதுவிற்பனையை ஊக்குப்படுத்தி, தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.  கொரோனா தொற்று காலத்திலும் கூட, அரசு கொடுத்த நிவாரண நிதிகளை குடித்து அழித்தவர்களும் உண்டு.

அதுமட்டுமின்றி. பண்டிகை தினங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அரசு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக  சொல்வது கிடையாது. இருந்தாலும், அதிகாரிகள் மூலம் மது விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுவது காலங்காலமாக நடைபெற்று வரும் செயல். அதுபோல இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி, இத்தனை கோடிக்கு மது விற்பனை செய்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

குறிப்பாக தந்தி ஊடகத்தில் இதுதொடர்பான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அரசே மதுபான விற்பனை ஊக்கப்படுத்தும் வகையில் இலக்கு நிர்ணயிப்பது வெட்கக்கேடு என சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள், சமூக ஊடகங்களில்கண்டனம் தெரிவித்தன.  இது போன்ற தகவல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,அமைச்சர் செந்தில் பாலாஜி, தந்தி ஊடகத்துக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். தீபாவளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டிய பிறகு  நீக்கியது. தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. நிர்வாகத்திடம் கூட முழு விவரம் வராத நிலையில், பொதுமக்களிடம் ‘விற்பனை விவரம்’ என பொய்யான தகவல்களைச் சேர்க்கிறீர்கள். உண்மையிலேயே நெறிமுறையற்றது. தவறான செய்திகளை பரப்பி அரசுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் தந்தி டிவி செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் தந்தி டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.