சென்னை: இளநிலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 19ம் தேதி தொடங்கிய மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று நிறைவு பெறுகிறது

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.  முதற்கட்டமாக   அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், கடந்த 19 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், 20 ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான  7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்படும் என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  இன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி  27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் நவம்பர் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும்.

மாநில இடங்களுக்கு நவம்பர் 7-ல் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தொடங்கி, 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும். இதைத் தொடர்ந்து முழுமைச் சுற்று (Mop up Round) கலந்தாய்வும், விடுபட்ட காலியிடங்களுக்கான இறுதிச் சுற்று (Stray Vacancy) கலந்தாய்வும் நடைபெறும் என்றும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

நவம்பர் 15-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்றும் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.