சென்னை: கமலின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமார், பாரிவேந்தர் கட்சிகளுக்கு தலா 34 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திகழ்கிறது. இந்த கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிகள் இணைந்துள்ளன.

இந்த கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து பேசப்பட்டு வரும் நிலையில்,  மக்கள் நீதி மய்யம் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக வரும் 12ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு பணியில் ஈடுபட்டிருக்கின்றன. திமுக, அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக உருவாகிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யமும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு சம்பந்தமாக எழுந்துள்ள அதிப்தியால், சில சிறிய கட்சிகள் மநீம கூட்டணிக்கு தாவி வருகின்றன. சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கைகோர்த்து கூட்டணியை உறுதிப்படுத்தியது. கா

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இருக்கும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 34 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதே போல, இந்திய ஜனநாயக கட்சிக்கும் 34 தொகுதிகள் வழங்கப்பட உள்ளதாம்.

தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.