சென்னை: இரட்டை தலைமை கொண்ட அதிமுகவில் சலசலப்புக்கு பஞ்சமில்லை. அதுபோல, தற்போது மீண்டும் இபிஎஸ்,ஓபிஎஸ் இடையே வேட்பாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் மோதல் எழுந்துள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே அருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவுக்கு இரண்டாக உடைந்தஅதிமுக பின்னர், பாஜகவின் உதவியினால் இணைந்து ஆட்சியை தொடர்ந்தது.  இருந்தாலும், அவ்வப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், மீண்டும் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவிற்கு 23, பாஜகவிற்கு 20 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி ஆகிய இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேமுதிக, தமாகா, தேமுதிகவுடன்  தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் எந்தவித முன்னேற்றமுமின்றிஇழுபறி நீடிக்கிறது.  அதிமுக குறைந்தபட்சம் 170 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், தோழமைக் கட்சிகளான புதிய நீதிக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி போன்றவைகளும் தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகின்றன.

இதற்கிடையில்,  அதிமுகவிலும் வேட்பாளர் நேர் காணல் முடித்து, வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் உள்பட 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஆனால், மேற்கொண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாமல் திணறி வருகிறது. இதில், இபிஎஸ், ஓபிஎஸ் இடையே, கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் தங்களது ஆதரவாளர்களை களத்தில் இறக்க விரும்புவதால், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விவகாரம், இன்று அதிமுக சார்பில் நடைபெற்ற  மகளிர் தின விழாவில் துணைமுதல்வர்ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை புறக்கணித்ததன் காரணமாக உறுதியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து,  இருவரிடைய ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை போக்க, மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  தலைமைக்குள் ஏற்பட்டுள்ள முட்டல் மோதல்களால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.