மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற நிலையில், உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் களம் கண்டு 4 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறார். மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றதன் காரணமாக, அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தும் பணிகளை கமல்ஹாசன் துவக்கியுள்ளார்.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களமிறங்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வேட்பாளர் தேர்வு, வாக்கு வங்கியை உயர்த்துவது, வெற்றி வாய்ப்புகள் போன்றவைகள் ஆலோசிக்கப்பட்டன.

தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது கட்சியை வளர்க்கவும் திட்டமிட்டுள்ளதாக அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக தொலைக்காட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.