சென்னை

ங்கை நதியில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் உடல்கள் மிதந்தது குறித்து கமலஹாசன் டிவீட் வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  நேற்றுவரை இந்தியாவில் 2.33 கோடி பேர் பாதிக்கப்பட்டு அத்ல் 2.54 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இந்த இரண்டாம் அலையில் பாதிப்பு மற்றும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரிப்பதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் கங்கை நதியைச் சுத்தம் செய்வதாக பாஜக வாக்குறுதி அளித்தது,  குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் இது முக்கியமான வாக்குறுதியாகப் பார்க்கப்பட்டது.  இதையடுத்து பீகார் மாநிலத்திலும் கங்கை நதி சுத்திகரிப்பு திட்டமான நமாமி கங்கை திட்டம் பாஜகவுக்கு அதிகம் பலன் அளித்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச எல்லையில் சுமார் 71 உடல்கள் கங்கை நதியில் மிதந்து கரை ஒதுங்கி  உள்ளன.  இவை கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் உடல் என அச்சம் எழுந்துள்ளதால் கடும் பதற்றம் நிலவுகிறது.   இந்த உடல்களை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நதியில் வீசி விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.  பீகார் உபி ஆகிய இரு மாநிலங்களும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டரில்,

“ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. 

மக்களையும் காக்கவில்லை. 

நதிகளையும் காக்கவில்லை.

ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன.”

எனப் பதிந்துள்ளார்.