சென்னை

திமுகவை எதிர்த்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் போது கமலஹாசன்  ரிமோட்டை எடுத்து டிவியை உடைத்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளதால் அக்கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட உள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.கவை கடுமையாக விமர்சித்து கமல்ஹாசன் பேசிவந்தார். கமல்ஹாசன் பிரசார விளம்பர வீடியோவில், தொலைக்காட்சி பெட்டியைத் தனது கையிலிருந்த ரிமோட்டை வைத்து உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது, அந்தக் கூட்டணியில் ஐக்கியம் ஆனதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

சென்னையில் இன்று கமல்ஹாசன் இது குறித்து,

 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள்; இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியைக் கேட்டது போல் என்னையும் கேட்பார்கள் அவர் சொன்ன பதிலைத் தான் நானும் சொல்லுவேன். நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்குச் சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை. 

நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது. தேர்தலில் போட்டியிடாதது தியாகம் இல்லை..வியூகம். தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை எடுத்து டி.வியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா எனக் கேட்கிறார்கள். நமது டி.வி; நமது ரிமோட்: அது இங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டி.வி.க்கான கரண்ட், ரிமோட்டுக்க்கான மின்கலத்தை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்” 

என்று விளக்கம் அளித்துள்ளார்.