யாருக்கு மது அவசியத்தேவை? : தமிழக அரசுக்குக் கமலஹாசன் கேள்வி

Must read

சென்னை

துக்கடைகள் திறப்பு தொடர்பாகத் தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகம் உட்பட நாடெங்கும் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அவசியத் தேவை தவிர மற்ற எதற்கும் மக்கள் வெளியே வரக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில் நாளை அதாவது மே 7 முதல் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கு உள்ளது. அரசின் இந்த  நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எதன் அடிப்படையில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அரசு முடிவு செய்கிறது?

மது யாருடைய அத்தியாவசிய தேவை?

அந்த வருமானத்தை நம்பி இருக்கும் அரசுக்கா? அல்லது தங்கள் சாராய ஆலைகளின் விற்பனை குறைந்ததை குறித்து கவலையில் இருக்கும் ஆண்ட, ஆளும் கட்சியினருக்கா?

40 நாட்களாகத் தொழில் இல்லாமல், வருமானமின்றி தவிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துங்கள் என்ற பலரது கோரிக்கைகளைக் கேட்கும் திறன் இல்லாத அரசுக்கும், இந்த வியாபாரத்தால் கொள்ளை லாபம் அடிப்பவர்களுக்கும் மட்டுமே மதுக்கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரிந்திருக்கக்கூடும்.

அண்டை மாநிலங்களில் விற்பனை உள்ளது என்பது பதிலாக இருந்தால், அவர்கள் பரிசோதிக்கும் வேகம், எளிய மக்களுக்கு அரசின் உதவிகள் சென்றடைய அரசின் திட்டம் மற்றும் நடவடிக்கைகள் என்று பல காரணிகள் உள்ளது.

படிப்படியாக மதுவிலக்கு என்று சத்தியம் செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய அரசு இது.

எவரின் வழிகாட்டுதலின்படி இந்த ஆட்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறதோ அவர் 500 மதுக்கடைகளை மூடி தனது மூன்றாவது பதவிக்காலத்தைத் தொடங்கினார் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வலியுறுத்துகிறது மக்கள் நீதி மய்யம்” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article