மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் வலியுத்தியுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் இன்றி மத்திய அரசுப் பணிகளுக்கு இடமாற்றம் செய்யும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமலஹாசன், “குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இந்தத் திருத்தம் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதோடு கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அழைக்க விரும்பும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.