சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில், மாணவி பயன்படுத்திய செல்போனை தாமதமின்றி  உடனே காவல்துறையிடம் ஒப்படைக்க பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மாணவியின் பெற்றோர் தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்குப் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். பள்ளி நிர்வாகம் அந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் மெத்தனம் காரணமாக, சம்பவம் நடைபெற்ற 3வது நாள் பெரும் வன்முறை தாண்டவமாடியது.  பள்ளி அடித்து நொறுக்கப்பட்டதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலன ஏராளமான பள்ளி பேருந்துகள் மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவி செல்போன் எதுவும் பயன்படுத்தவில்லை என மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, மாணவியிடம் செல்போன் இருந்தும் அதனை மறைத்தால் அது சட்டப்படி தவறு. அதற்காக பெற்றோரை விசாரிக்க உத்தரவிட நேரிடும் என எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன் முன்பு மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, மாணவியின் செல்போனை காவல் துறையிடம் ஒப்படைக்க மாட்டோம் எனவும், அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் முறையிட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசு வழக்கறிஞர் சந்தோஷ், செல்போனை பெற்றுக்கொள்ள மறுத்ததோடு, செல்போனை புலன் விசாரணை நடத்தி வரும் காவல் துறையினரிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கை புலன் விசாரணை செய்து வரும் காவல் துறையிடம் செல்போனை வழங்கினால் உடனடியாக அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற முடியும் எனக் கூறி பெற்றோர் தரப்பு கோரிக்கையை நிராகரித்தார். இதையடுத்து, செல்போனை தாமதிக்காமல் காவல் துறையினரிடம் ஒப்படைக்கவும் பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.