டெல்லி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவியின் மறு உடற்கூராய்வை நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்ற உச்ச நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து உள்ளது. நாளை மறுதினம் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரியும், மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிடக் கோரியும், உடற்கூறாய்வின்போது தங்கள் தரப்பு மருத்துவர் இடம்பெற அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி சதீஷ்குமார், 3 அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தடயவியல் அதிகாரி ஆகியோர் அடங்கிய குழவை நியமித்து, மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டிருந்தார். மாணவியின் தந்தையின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.

இதையடுத்து, மாணவியின் தந்தை தரப்பில் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், மறு உடற்கூராய்வின்போது, தங்கள் தரப்பு மருத்துவரை உடனிருக்க அனுமதிக்க கோரியும், அதுவரை மறு உடற்கூராய்வை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரியும் முறையீடு செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையே என கேள்வி எழுப்பியதுடன்,  மாணவியின் மறு உடற்கூராய்வை இன்று நிறுத்திவைக்க உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்ததுடன், இந்த வழக்கை  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், 21ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.