சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்  செய்யப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு பதிலாக  உதயகுமார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும், சட்டமன்ற அதிமுக துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சட்டமன்ற  சபாநாயகர் அப்பாவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி உள்ளார். இந்த கடிதத்தை அதிமுக எம்எல்ஏவும் கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சட்டமன்ற செயலகத்துக்கு  நேரில் சென்று சபாநாயகரிடம் அளித்தார்.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் தீர்மானத்தின்படி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த 17ந்தேதி அடையாறில் உள்ள தனியார் சொகுசு ஒட்டலில் நடைபெற்றது. அதிமுகவில் மொத்தம் 66 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், ஓபிஎஸ் உள்பட 3 பேர் தவிர மற்றவர்கள்  இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், குடியரசு தலைவர் தேர்தல், துணை குடியரசு தலைவர் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் உள்பட கட்சியில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து இக்கூட்டத்தில், சட்டமன்ற எதிக்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், சட்டமன்ற அதிமுக துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதையும் உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தை, அதிமுக எம்எல்  எஸ்.பி.வேலுமணி, சம்மன்ற செயலகம் சென்று நேரில் வழங்கினார்.

இதற்கிடையில் ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கட்சி விதிப்படி நடைபெறவில்லை. எனவே அந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். தங்கள் தரப்பையும் விசாரிக்காமல் முடிவெடுக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் ‘கேவியட்’ மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 62 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். ஓ.பி.எஸ். அணியில் அவரையும் சேர்த்து 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அடுத்தக் கட்ட அதிரடி நடவடி க்கையை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.