ரிமா சங்க கூட்டத்தில் பேசிய திரைப்பாடலாசிரியர் வைரமுத்து, “கபாலி படம் தோல்வி” என்று பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவ, ரஜினி ரசிகர்கள் வைரமுத்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.
கபாலி படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வைரமுத்து இப்படி பேசுவதாக கபாலி படத் தயாரிப்பாளர் தாணுவும் வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இதையடுத்து, வைரமுத்து விளக்கம் கொடுத்தார்.  அதில், “கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாக இருந்ததில்லை என்பதை விளக்கி பேசினேன்.

"கபாலி" ரஜினி
“கபாலி” ரஜினி

கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை.  ஏற்றுக் கொள்ளாததைக் கூட நாம் புரிந்து கொள்ள முடியும். கடவுளை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையை புரிந்து கொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றேன். அப்போ, ஆண்-பெண் உறவுகள்- இல்லறம் அன்பு- காதல்- கண்ணீர்- அரசியல்- கலை- அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் வெற்றி தோல்வி போன்றவைகளை  ஏற்றுக் கொள்ள முடியாத இடத்திலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன். கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன்.. அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.
என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது; ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம்…அதை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
இந்த செய்தி வெளியாவதற்கு முன்பே ரஜினி சென்னைக்கு வந்த மறுநாள் அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள் என்று பெருந்தன்மையாகப் பேசினார். எங்கள் நட்பு பெரியது. தயவு செய்து வரும் இதை சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” என்று வைரமுத்து நீண்ட விளக்கமும் வருத்தமும் தெரிவித்தார்.
இந்த சர்ச்சை அடங்கிய நேரத்தில், அதே கூட்டத்தில் வைரமுத்து பேசிய வேறு சில வார்த்தைகள் இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன.
அந்த கூட்டத்தில் மேடையில் இருந்தவர்களை நோக்கி, கபாலியில் ரஜினி கோட் சூட் போடுவதற்கு முன்பே அரிமா சங்கத்துக்காரங்க போட்டுட்டாங்க. உங்களைப் பார்த்துதான் ரஞ்சித், கபாலியில் ரஜினிக்கு கோட்-சூட் போடவைத்து அந்தப் படமும் ஓடிக்கொண்டிருக்கிறது. குளிக்கும் போதும் கோட்-சூட் போட்டுக்கிட்டு…” என்று  நிறுத்தி கிண்டலாக சிரித்தார் வைரமுத்து.
வைரமுத்து
வைரமுத்து

இதை குறிப்பிடும் சிலர், “கபாலி திரைப்படத்தில் ரஜினி கோட் சூட் அணிந்திருப்பது அடிமைமக்களின் எழுச்சிக்கான குறியீடாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதை அப்படத்தின் இயக்குநரான ரஞ்சித்தும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ஆடை அரசியல், ஆடையின் முக்கியத்துவம் குறித்தும், அப் படத்தில் ரஜினி்க்கு  ஏன் கோட், சூட் என்பது குறித்தும் ரஞ்சித் விளக்கியிருக்கிறார்.
படத்திலும் ரஜனி நடிக்கும் கபாலி கேரக்டர், “நான் மேல வருவேண்டா. முன்னேறுவேண்டா. கோட்டும் சூட்டும் போட்டுகிட்டு  உங்க முன்னால கால் மேல் கால் போட்டுகிட்டு உட்காருவேண்டா… பிடிக்கலைன்னா சாவுங்கடா” என்று ஒரு காட்சியில் பேசும்.
தலித் தலைவர்களான இரட்டைமலை சீனிவசன், அம்பேத்கர் போன்றவர்கள் கோட் சூட் அணிந்துதான் காட்சியளித்தார்கள்.  அடிமைகளின் எழுச்சியின் அடைாயளமாக கோட் சூட்டுக்கு ஒரு வரலாறு உண்டு. அதைத்தான் இயக்குநர் ரஞ்சித்,  கபாலியில்  காட்சியாக வைத்திருக்கிறார்.
இதைத்தான் வைரமுத்து, தனது சாதீய வன்மத்தோடு கிண்டலடித்திருக்கிறார்.  ஆகவே கபாலி தோல்வி பேச்சுக்காக மன்னிப்பு கேட்டது மட்டும் போதாது, கோட் சூட் என்று கிண்டலடித்ததற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். தங்களது இந்த கருத்தை சமூகவலைதளங்களிலும் எழுதி வருகிறார்கள்.
கபாலி தோல்வி பேச்சுக்குப் பிறகு, இந்த சர்ச்சை வைரமுத்துவை சுற்றி வளைத்திருக்கிறது.