சென்னை:  காணும் பொங்கலான நேற்று ( 17ந்தேதி) சென்னை கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், மெரினா, பெசன்ட் நகர்  கடற்கரை பகுதியில் காணாமல் போன 27 குழந்தைகள் மீட்கப்பட்டு,  அவர்களின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை  நேற்று  உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையின் மிக முக்கிய கடற்கரையான மெரீனாவில் சுமாா் காலை 11 மணியில் இருந்தே ஏராளமான மக்கள் வரத்தொடங்கினா். குழந்தைகள், உறவினா்களுடன் வந்த அவா்கள் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனா்.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உழைப்பாளா் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரை முழுவதும் கூடுதலாகக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 12 உயா் கோபுரங்களில் இருந்தபடி பைனாகுலா் மூலம் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும், கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடற்கரையோரம் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் அருகே நீச்சல் பயிற்சி பெற்ற போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

குதிரைகள் மற்றும் வாகனங்கள் மூலம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். இதுதவிர ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மெரீனா கடற்கரைக்கு வந்த மக்கள் பலா் அங்கிருந்து அருகில் உள்ள தீவுத்திடலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் சுற்றுலா பொருள்காட்சியையும் கண்டுகளித்தனா். இதேபோல்,கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை, திருவிடந்தை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. முக்கிய கடற்கரையான பெசன் நகரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பொழுதைக் கழித்தனா்.

இந்த நிலையில் கடற்கரை பகுதியில் காணாமல் போன 27 குழந்தைகள் மீட்கப்பட்டு,  அவர்களின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,   17.01.2024 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் (Amusement Park) உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இகாப, அவர்கள் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் மேற்பார்வையில் 15,500 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மேலும், கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி கடற்கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன்பேரில், D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உழைப்பாளர் சிலை முதல் கண்ணகிசிலை வரையிலுள்ள கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 23 குழந்தைகள், D-5 மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 2 குழந்தைகள் மற்றும் J-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 2 குழந்தைகள் என மொத்தம் காணாமல் போன 27 குழந்தைகள் சென்னை பெருநகர காவல் குழுவினரால் மீட்கப்பட்டு, பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.