சென்னை

மத்திய அரசு விஸ்வகர்மா திட்டம் மூலம் குலக்கல்வி முறையை திணிக்க முயல்வதாக கீ வீரமணி கூறி உள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் வீரமணி,

”வருணாசிரம தர்மமான சனாதன தர்மத்தை – ஜாதியை காப்பாற்றி நிலைக்க வைக்கும் தத்துவத்தைப் பாதுகாப்பதே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியின் செயல்பாடாகும். இப்போது மீண்டும் ஆரியத்தின் ஆணிவேரான பே(வ)தத்தினை, படிக்கட்டு ஜாதி முறையை, Graded inequality என்று டாக்டர் அம்பேத்கர் தெளிவுபடுத்திய பேத ஒழிப்புக்கு எதிராக, மனித சமத்துவத்தை வெடி வைத்து, உயர்ந்தவன் – தாழ்ந்தவன்; தொடக்கூடியவன் – தொடக்கூடாதவன் என்று மனிதர்களை வேற்றுமைப்படுத்தி, அடிமைப்படுத்திய குலதர்மப் பாம்பு, பிரதமர் மோடி ஆட்சியில் திடீரெனப் படமெடுத்தாடி அதன் நச்சுப் பல்லை நீட்டிக் காட்டுகிறது இப்போதும்!

‘விஸ்வகர்மா திட்டம்” என்பதின்படி ஒரு புதிய குலதர்மத் தொழிலைப் புதுப்பித்து, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது சுமத்தப்பட்ட அந்தப் பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பித்து, அந்த “கீழ்ஜாதியர் அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 லட்சம் பேர் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்று ஆகஸ்ட் 15 ஆம் நாளில் டெல்லி செங்கோட்டை உரையில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

16.8.2023 அன்று “பி.எம். விஸ்வகர்மா” (“PM Viswakarma”) திட்டம் என்பதை அமைச்சரவையின் பொருளாதார குழு ஏற்று 13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாம்! பள்ளிக்கூடங்களுக்குப் பதிலாக குரு – சிஷ்ய பரம்பரைக் கல்விப் பயிற்சியாம்! 2023-2024 முதல் 2027-2028 வரை இத்திட்டப்படி குலத் தொழிலை செய்ய அவரது வாரிசுகளுக்கு, குடும்பத்தினருக்கு கற்றுக் கொடுப்பார்களாம். அதற்கு இந்த 13,000 கோடி ரூபாயாம்! 18 பாரம்பரிய குலத் தொழிலை அடையாளம் கண்டுள்ளார்களாம்! என்னே கொடுமை! சனாதனத்தின் முழு வீச்சுத் திணிப்பல்லவா இது! வர்ணாசிரம வக்கிரத்தின் அக்கிரமம் அல்லவா இது!

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் புதைகுழிக்கு அனுப்பப்பட்ட குலக் கல்வித் திட்டம், ஆரியம், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின்மூலம் மீண்டும் புதிய அவதாரம் எடுத்து, அகில இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்டோரை வதைக்க – டாக்டராக, பொறியாளராக, வழக்குரைஞராக, நீதிபதியாக ஆகாமல் தடுப்பதற்கான ஒரு திட்டமே இந்தப் புதிய குலதர்மத் தொழில் புதுப்பிக்கும் இந்தத் திட்டமாகும்! பெற்றோர்களே, புரிந்துகொண்டு, விழித்துக் கொள்வீர்! விடியல் ஏற்படுத்த ஆயத்தமாவீர்! தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியும், அதன் ஆற்றல்மிகு முதல்-அமைச்சரும் தமிழ்நாடு இத்திட்டத்திற்கு ஒருபோதும் இசைவு தராது; கடுமையாக எதிர்க்கும் என்பதைப் பிரகடனப்படுத்துவதும் அவசர, அவசியம்”

என்று தெரிவித்து உள்ளார்.