செயல்படும் ஆட்சியாக இருக்க வேண்டும்: ஜெ.வுக்கு கி.வீரமணி அறிவுரை

Must read

சென்னை:
ட்சி இனி வெறும் ‘காட்சியாக’ அமையாமல், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் ஆட்சி என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய மகத்தான கடமைதான் ஆளும் கட்சியின் மாண்பை உயர்த்தும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், செல்வி ஜெயலலிதா தலைமையில் ஆண்ட அதிமுக மீண்டும் 134 உறுப்பினர்களின் பலத்தோடு இன்று 29 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாக ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது.
அதைவிடக் குறிப்பிடத்தக்கது, முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வெறும் 23 பேர்களை மட்டுமே எதிர்க்கட்சி உறுப்பினர்களாகக் கொண்ட திமுக, இப்போது 89 உறுப்பினர்களைக் கொண்ட பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாகவும் அமர்த்தப்பட்டுள்ளது. பதவியேற்கும் முதல்வர் மற்றும் சக அமைச்சர்கள் 28 பேருக்கும் நமது வாழ்த்துகள். திமுக தலைவர் கருணாநிதி அவர்களது தலைமையில் எதிர்க்கட்சியாக அமர்ந்து தனது ஜனநாயகக் கடமைகளை மேலும் பயனுறு வகையில் நடத்தவிருக்கும் திமுக – காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய (கூட்டணி) கட்சிகளுக்கும் வாழ்த்துகள்.
சில ஊடகங்கள் தொலைக்காட்சிகளில் கூறப்பட்டதுபோல், ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற சென்ற ஆட்சிக்கு எதிரான மக்கள் மனோபாவம் இல்லை என்பது உண்மை இல்லை. ஆளுங்கட்சிக்கு எதிரான மனோபாவம் இருந்ததால் தான் இவ்வாறு தேர்தலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
முந்தைய ஆளுங் கட்சியின் பலம். 146 லிருந்து 134 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. போட்டியிட வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அமைச்சர்களில் 5 முக்கிய (சீனியர்) அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது பெற்ற வாக்கு விகிதாசாரம் இப்போது குறைந்துள்ளது. முந்தைய தேர்தலின்போது (2011) வெற்றி பெற்ற அ.தி.மு.க.வினர் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு- இப்போது பல தொகுதிகளில்.எதிர்க்கட்சி தி.மு.க.விற்கும் ஆளும் கட்சியாக வந்துள்ள அதிமுகவுக்கும் உள்ள வேறுபாடு 1.1 சதவிகிதம் மட்டுமே. நூலிழையில் தான் ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சென்ற முறை அதிமுகவும் அதன் முதல்வரும், அமைச்சர்களும், அதன் சபாநாயகரும் கடைப்பிடித்த சட்டசபை அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதோ, ‘எல்லாமே நான்’ என்ற தன்முனைப்போ இனி எடுபடுமா என்பது சந்தேகம் தான். சட்டசபையில் நாங்கள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம் என்ற திமுக தலைவர், பொருளாளர் ஆகியோரின் கருத்துக்கள் பெரிதும் அனைவராலும் வரவேற்கப்படக் கூடியவையே. ஆட்சி இனி வெறும் ‘காட்சியாக’ அமையாமல், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் ஆட்சி என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய மகத்தான கடமைதான் ஆளும் கட்சியின் மாண்பை உயர்த்தும்.
ஆக்கப் பூர்வமாண கருத்துகளை எதிர்க்கட்சியினரோ வேறு வெளியில் உள்ளவர்களோ சொன்னாலும், அதிமுக அதை சீர்தூக்கி ஆராய்ந்து தேவையானவை என்று கருதினால் செயல்படுத்தத் தயங்கக் கூடாது . பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அமைந்துள்ள ஆளுங்கட்சி, அதன் முதல் அமைச்சர் அம்மையார் அவர்கள் பதவியேற்கும்முன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்தது மகிழ்ச்சி. அதைவிட முக்கியம் ஆட்சியில் செயல்படுகையில் அத்தலைவர்களின் சீலங்களுக்கு – கொள்கை நெறிமுறைகளுக்கு மரியாதை காட்டி முக்கியத்துவம் தர வேண்டும்
download
தேர்வுக்குப்பின் ஆட்சி அமைத்தபின் அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்களே. வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்குமே முதல் அமைச்சர் என்பதை நினைவிற் கொண்டு செயல்படுவது தான் ஜனநாயக நெறிமுறையாகும். முதலமைச்சர் தமது அமைச்சர்களை ‘ஜீரோக்களாக’ வைத்திருக்காமல் ‘ஹீரோக்களாக’ தகுதி பெற – ஊழலுக்கு இடந்தராத நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதும் ஜனநாயக அடிப்படை – எதிர்பார்ப்பு.
எதிர்க்கட்சியாகக்கூட சட்டமன்றத்திற்குள் போக முடியாதவர்களாக்கப்பட்டார்கள், திராவிடக் கட்சிகளே கூடாது என்று வீம்பு பேசியவர்கள். அது பரிதாபம்தான். இது திராவிட மண் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதை அவர்களும் நினைவில் கொண்டு நடந்து கொள்வது இனி நல்லது. அனைவருக்கும் நமது நல் வாழ்த்துகள்” – இவ்வாறு தனது அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article