சென்னை

டந்த 70 ஆண்டுகளாகப் பெரியார்,அண்ணா, கருணாநிதி பேசியதை உதயநிதி பேசியதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

நேற்றுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நினைவு பேரணி நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.

வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் டில்லி பாபு தலைமையில் பெரம்பூரில் நடைபெற்ற பேரணியை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் காரப்பாக்கம் முதல் போரூர் ரவுண்டானா வரை பேரணி நடைபெற்றது.

பெரம்பூரில் பேரணியைத் தொடங்கி வைத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம்

“இந்தியாவில் சாதி, மத, மொழியின் பெயரால் பாஜகவினர் மக்களைப் பிரிக்கிறார்கள். இந்தியா இன்றைக்கு வல்லரசாக உள்ளது என்று சொன்னால் அதற்குக் காங்கிரஸ் கட்சியின் தியாகம்தான் காரணம். இந்தியா கூட்டணி தற்போது வலிமையான கூட்டணியாக உள்ளதால் எல்லா கட்சிகளும் இதில் இணைந்துள்ளார்கள். இந்த கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடையும்.

கடந்த 70 ஆண்டு காலமாக பெரியார் எதைப் பேசினாரோ அண்ணா எதைப் பேசினாரோ கருணாநிதி எதைப் பேசினாரோ அதைத்தான் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பேசியுள்ளார். ஏன் பா.ஜ.க.வினர் இதற்கு இப்படிக் குதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை”

என்று கூறி உள்ளார்.