சென்னை

 நீதிபதி அல்லி அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து செந்தில் பாலாஜி அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அத்துடன்  போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையும் நடந்து வருகிறது.

எனவே இந்த விசாரணை முடிவடையும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையைத் தொடங்கக்கூடாது என்றும், இந்த விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் பரணி குமார் மூலம் செந்தில் பாலாஜி அதே நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.

நேற்று இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ். அல்லி முன்னிலையில் நடந்தது. வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், மனுவை நீதிபதி எஸ்.அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அவரை இன்று நேரில் முன்னிறுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.