கோவை:

கோவை அருகே வனப்பகுதியை ஆக்ரமித்து கடட்டங்களை ஈஷா யோகா மையம் கட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. சமீபத்தில் இந்த மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த மையத்தின் மீதான விமர்சனம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் அனுமதியில்லா கட்டடங்கள் கட்டியிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நடந்த பிறகு தன்னை குறிவைத்து சில குழுவினர் செயல்படுவதாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நகரமைப்பு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில்,‘‘112 அடி உயர சிவன் சிலை அமைத்தது மற்றும் வளைவு, சாலை, வாகன நிறுத்துமிடம், மண்டங்கள் கட்டியதற்கு முறையான அனுமதி பெறவில்லை’’ என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘‘என் மீதான குற்றச்சாட்டில் ஒன்றை நிரூபித்தால் கூட நிலத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறேன். நகரமைப்பு இயக்குனரகம் எங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வனப் பகுதி அல்லது வன எல்லையில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்கு எவ்வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது என்று சட்டம் உள்ளது. இதை நாங்கள் மதித்து நடந்துள்ளோம். சில நீதிபதிகள் 150 மீட்டர் தூரம் என்று தெரிவித்துள்ளனர். அதாவது 500 அடி. அப்படி என்றால் அது எனது நிலத்திற்கு வெளியே வரை வருகிறது. இது ஒரு நீதிபதி மட்டுமே தெரிவித்துள்ளார். இதர அனைத்து உயர்நீதிமன்ற நடைமுறைகளில் 50 மீட்டர் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,‘‘ எங்களது நிலத்தின் அருகில் பாக்கு மற்றும் தென்னந் தோப்புகள் இருந்தன. நான் இங்கு வருவதற்கு முன்பே அவை இருந்தது. இவை அனைத்தும் வருவாய் துறை நிலங்கள். வனத்துறை நிலம் கிடையாது. வனத்துறை நிலம் அருகில் இருப்பது உண்மை தான். ஆனால் அது யானைகள் வழித்தடம் கிடையாது. இதை சுற்றுசூழல் அமைச்சகமோ, சர்வதேச வனஉயிரின நிதி முகமையோ, மாநில அரசின் வனத்துறையோ தெரிவிக்கவில்லை.

இங்கே சில குழுக்கள் உள்ளது. அவர்கள் தங்களை சுற்றுசூழல் ஆர்வலர் குழுக்கள் என்று கூறிக் கொள்கின்றன. இதில் பலர் வேட்டைக்கு செல்லக் கூடியவர்கள். வேட்டை மூலம் கிடைக்கும் உயிரினங்களை சமைத்து சாப்பிடுபவர்கள். அதை நாங்கள் நிறுத்தியுள்ளோம். அவர்களின் தேவைக்கு சந்தன மரங்களை வெட்டி கடத்தினர். இதையும் தடுத்துள்ளோம். அதேபோல் மலைவாழ் பெண்கள் கற்பழிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தியுள்ளோம். என்ன நடந்தது என்று தெரியாமல் மீடியாக்கள் என்னை தாக்குகின்றன. என்னை குற்றவாளியாக சித்தரிக்கின்றன. ஒரு குற்றச்சாட்டை நிரூபித்தால் கூட நாங்கள் இங்கிருந்து வெளியேறி வி டுகிறோம்’’ என்றார்.

பல சுற்றுசூழல் ஆர்வலர் குழுக்கள், குடியிருப்பு வாசிகள், மலை வாழ் மக்கள் போன்ற சிலர் ஈஷா யோகா மையத்தில் வனப்ப குதியில் அனுமதியின்றி கட்டடடம் கட்டப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்துள்ளன. இவர்கள் அனைவரையும் தனது அறக்கட்டளையை குறித்து செயல்படுவதாக ஜக்கி வாசுதேவ் தெரிவிக்கிறார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி அனுமதியின்றி இக்கரை பொலுவம்பட்டி கிராமத்தில் ஈஷா யோகா மையம் 109 ஏக்கரில் கட்டடங்கள் கட்டப்பட்டதை பூட்டி சீல் வைத்து, இடிக்கும் நோட்டீஸை நகரமைப்பு துறை வழங்கியுள்ளது. இதை வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு குழு சமர்ப்பித்திருந்த தகவல் அறியும் உரிமை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.