புதுடெல்லி: பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஜுலை மாத ஊதியம் இன்னும் வந்துசேரவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த 2 நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 1.98 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பிஎஸ்என்எல் ஊழியர்கள் தங்கள் ஜுலை மாத ஊதியத்தை ஆகஸ்ட் 5ம் தேதி பெறுவார்கள் என்று அந்நிறுவன மேலாண் இயக்குநர் பி கே புர்வார் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ஊதியம் தொடர்பாக நிர்வாகத்திலிருந்து எந்தவித தகவலும் பகிரப்படவில்லை என்று பிஎஸ்என்எல் யூனியன் தலைவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

ஊழியர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கான நிதி திரட்டப்பட்டு வருவதாகவும், ஆகஸ்ட் 5ம் தேதி அனைவருக்குமான ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டும் 1.76 லட்சம் ஊழியர்களும், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 22,000 ஊழியர்களும் பணியாற்றுகின்றனர்.

பொதுவாக, மாத இறுதியிலேயே இந்த 2 நிறுவனங்களின் ஊழியர்களுக்குமான சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்கில் போடப்பட்டுவிடும். ஆனால், இரண்டாவது முறையாக இதுபோன்ற தாமதம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், இது இரண்டாவது தாமதமாகும்.