சென்னை

மைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  அவர் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் 3 அடைப்புக்கள் உள்ளதால் பை பாஸ் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர்.

இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்துச் சென்ற நீதிபதி அல்லி அவருக்கு வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என தீர்ப்பு  அளித்தார்.   இதற்கு திமுக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அவர்களின் வாதங்களை நீதிமன்றத்தில் வந்து எடுத்துரைக்க வேண்டும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் நெஅவும் அதனால் ஜாமீனில் அவரை விட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.  மேலும் கைது குறித்து செந்தில் பாலாஜியிடமோ அல்லது அவர் குடும்பத்தினரிடமோ எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் செந்தில் பாலாஜி கைது குறித்த விவரங்கள் அவரிடமும், குடும்பத்தினரிடமும் தெரிவிக்கபட்டதாக கூறி உள்ளனர்.  மேலும் அமைச்சரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  மேலும் அவருக்குத் தேவைப்படும் சிகிச்சைகளை அளிக்க மருத்துவர் குழு அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் குறித்த தீர்ப்பை நாளை ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்து வழக்கை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.