நீதிபதி கர்ணனுக்கு வீட்டிலேயே மருத்துவ பரிசோதனை! பரபரப்பு

Must read

கொல்கத்தா,

ச்சநீதி மன்ற நீதிபதிகளின் தீர்ப்பை தொடர்ந்து கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு அவரது வீட்டில் மருத்துவர்கள் குழு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக அவர் வீடு இருக்கும் பகுதி பரபரப்பு நிலவி வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள நீதிபதி கர்ணனின் மன நிலையை பரிசோதிக்க, அவரது வீட்டுக்கு, மருத்துவக் குழு சென்றுள்ளது.

இதற்காக கொல்கத்தா அரசு மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அவர்கள் காவல்துறை பாதுகாப்புடன் நீதிபதி கர்ணன் வீட்டுக்குச் சென்றனர்.

நீதிபதி கர்ணன் மீதான வழக்கு ஒரு பார்வை…

• சென்னையில் பணியாற்றியபோது தன்னுடன் பணியாற்றிய சக நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி கடிதம் எழுதினார்..

• அதைதொடர்ந்து நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

• கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்ட நீதிபதி கர்ணன் அங்கு தனது பணியிட மாற்றத்துக்கு தானே தடைவிதித்துக் கொண்டார்.

• இதையடுத்து, அவருக்கு வழக்குகளை ஒதுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

•  நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் குறிவைக்கப்படுகிறேன் என்று கூறிய நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

•  இதையடுத்து, உச்ச நீதிமன்றம் கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்து நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

• தொடர்ந்து நீதிபதி கர்ணன் கடந்த மார்ச் 31-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

•  நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.

• உச்சநீதி மன்ற நீதிபதிகளின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கர்ணன், அவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் கறை படிந்தவர்கள் என்றும், தன் முன் 8ந்தேதி  விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

•  தொடர்ந்து  நீதிபதிகள் ஆஜராகத் தவறினால், அவர்களுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத பிடியாணைகளை வெளியிட வேண்டும் என்று கொல்கத்தா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் தீர்ப்பை தொடர்ந்த இன்று அவருக்கு  மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த மருத்துவக்குழுவினர் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்த நீதிபதி கர்ணன்,  எனக்கு சோதனை நடத்த வரும் மருத்துவக் குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை அதிகாரியையே பணி நீக்கம் செய்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் குழுவினருக்கு கர்ணன் ஒத்துழைப்புக் கொடுப்பாரா அல்லது  வேறு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்….

More articles

Latest article