கோவை:

கோவையில் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டை நீதிபதி கர்ணன் முன்வைத்தார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்து, நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆஜராகாததால் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன் முன்பு, ஆஜராக கர்ணன் உத்தரவிட்டார். நீதிபதி கர்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். கர்ணனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்ணனை கைது செய்ய, கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர்.

ஆனால் அவர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆந்திராவில் அவர் பதுங்கி இருப்பதாக கருதி அங்கு சென்ற கொல்கத்தா போலீசார் தேடினர். ஒரு மாதத்திற்கு மேலாக தேடியும் அவரை கண்டுபிடிக்க போலீசாரால் முடியவில்லை. இதற்கிடையில் கடந்த 10ம் தேதி, நீதிபதியாக இருந்த கர்ணனின் பதவிக்காலம் முடிவடைந்தது.

கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் முன்னாள் நீதிபதி தலைமறைவாக இருப்பதாக உளவுத்துறை போலீசார் மூலம் கொல்கத்தா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார். கோவையில் இருந்து போலீசுடன் செல்ல மறுப்பு தெரிவித்து கர்ணன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேற்கு வங்க ஏடிஜிபி ராஜேஷ் குமார் செய்தியார்களிடம் கூறுகையில், ‘‘ கர்ணன் இன்று இரவு 11 மணி அளவில் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு நாளை அழைத்து செல்லப்படுவார்’’ என்றார்