சென்னை:

ஆட்டிறைச்சி சாப்பிடலாம் ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்பது என்ன சட்டம்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பதை ஒட்டி, மாலை நேரங்களில் இஃதார் விருந்துகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும் வழக்கம்போல தே.மு.தி.க. சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அக்கட்சி அலுவலகத்தில் நடந்தது.

இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில்  இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அனைவரும் அண்ணன், தம்பிகளாக பழகி வருகிறோம். எனது உற்ற நண்பர்களாக இருப்பவர்கள் இஸ்லாமியர்கள்தான்” என்று தெரிவித்தார்.

மேலும், “ஆட்டிறைச்சி சாப்பிடலாம் ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்றால் அது என்ன உங்கள் சட்டம்? ஆடு, கோழி இறைச்சிகளை விற்க தடை விதிக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய அவர், “மக்கள் அவரவர் விரும்பும் உணவை உண்ண உரிமை இருக்கிறது” என்றார்.