கொரோனா: ரெமெடிசிவிர் உற்பத்திக்கான உரிமத்தைப் பெறும் இந்தியாவின், ஜுபிலண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனம்

Must read

உரிம ஒப்பந்தத்தின் கீழ், ரெமெடிசிவிர் உற்பத்திக்கான, தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் ஜுபிலண்ட் லைஃப் சயின்சஸ்  நிறுவனம் பெறவுள்ளது.

இந்திய மருந்து நிறுவனமான ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ் மே 12 அன்று அதன் துணை நிறுவனமான ஜூபிலண்ட் ஜெனரிக்ஸ் லிமிடெட்டின் கீழ், இந்தியா உட்பட 127 நாடுகளில் ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து விற்பனை செய்ய கிலியட் சயின்ஸுடன் ஒரு  ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக அறிவித்தது. உரிம ஒப்பந்தத்தின் கீழ், அந்தந்த நாடுகளில் உள்ள ஒழுங்குமுறை அதிகாரிகளின் ஒப்புதலின் பேரில், COVID-19 நோயாளிகளுக்கு மருந்தை விரைவாக உற்பத்தி செய்து வழங்கும் வகையில், கிலியட் ஃபார்மா  நிறுவனத்திடம் இருந்து தயாரிப்பு முறைக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தையும் பெறவுள்ளது. இந்த தொழில்நுட்ப ஒப்பந்தம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜுபிலண்ட் லைஃப் சயின்ஸின் இணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஷியாம் பார்தியா மற்றும் ஹரி பார்தியா, “கிலியட் உடனான எங்களின் ஒப்பந்தம் மற்றும் உரிமத்திற்கான கூட்டணி பற்றி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதுவரையிலான ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் மற்றும் அதன் முடிவுகளின் அடிப்படையில் இது கொரோனாவிற்கான ஒரு சாத்தியமான தீர்வாக இருக்கும் என்று உறுதியாகிறது. கொரோனாவினால் உலகளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டிருக்கும்  சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியிருக்கும் கொரோனா வைரஸிற்கான சரியான பதிலடியை நாம் பெறுகிறோம். மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களை நாங்கள் மிக நெருக்கமாக கண்காணித்து, முறையான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்குப் பிறகு விரைவில் மருந்து உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறோம்.” என்றனர்.

கடந்த வாரம் கிலியட் நிறுவனம், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் அதன் தயாரிப்பான COVID-19 – க்கு எதிராக சோதனையில் இருக்கும் ரெமெடிசிவர் மருந்தை, ஐரோப்பா, ஆசியா மற்றும் வளரும் நாடுகளில் குறைந்தபட்சம் 2022 வரை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியது. உலகெங்கிலும் COVID-19 க்கு சிகிச்சையளிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதாலும், புதிய கொரோனா வைரஸ் பரவலினால்  உலக நாடுகள் ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ளது என்பதாலும், இந்த ரெமெடிசிவரைப் பயன்படுத்த பெரும் எதிர்ப்பார்ப்பு மற்றும் தேவை இருந்து வருகிறது. ஏற்கனவே, இதை பரிசோதிக்கவும், பயன்படுத்துவதற்காகவும்  அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால், அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை கிலியட் கடந்த வாரம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அனுமதியின் மூலம்,  கடுமையான COVID-19 நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெமெடிவிவைர் மருந்தை பரவலாக பயன்படுத்தும் அனுமதியைப் பெற்றதாகிறது. இந்த அவசரகால அனுமதியானது, உலக அளவில் நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், மிதமான மற்றும் கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுக் கட்டம் 3, மற்றும் கிலியட்டின் உலகளாவிய தீவிர அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுக் கட்டம் 3 ஆகிய இரண்டு உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளிலிருந்து கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு இந்திய நிறுவனத்திற்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு வணிகரீதியானது என்றாலும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் இருந்து விடுபட உதவும் எனில் அதையும் ஏற்றுக் கொள்வோம்.
தமிழில்: லயா

More articles

Latest article