ஷில்லாங்: ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் வசதிகள் குறித்து கட்டுரை வெளியிட்டதற்காக, ‘ஷில்லாங் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபாரதம் விதித்துள்ளது மேகாலயா உயர்நீதிமன்றம்.

மேகாலயா நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி முகமது யாகூப் தலைமையிலான அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற விசாரணையின்போது, பத்திரிகை ஆசிரியர் பேட்ரிஷியா முகிம் மற்றும் வெளியீட்டாளர் ஷோபா செளத்ரி ஆகிய இருவரையும், நீதிமன்றத்தின் ஒரு மூலையில், விசாரணை முடியும்வரை அமர்ந்திருக்குமாறு பணித்தனர் நீதிபதிகள்.

சட்டப்பிரிவு 215ன் கீழ், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தண்டனையை வழங்கியுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. அபராதத் தொகையை இருவரும் 1 வாரத்திற்குள், நீதிமன்ற பதிவகத்தில் செலுத்த வேண்டும்.

அப்படி தவறினால், இருவருக்கும் 6 மாதகால சிறைதண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் நடத்தும் ஷில்லாங் டைம்ஸ் பத்திரிகையும் தடைசெய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சம்பந்தபட்ட சர்ச்சைக்குரிய கட்டுரை, 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி