திரைப்படங்களை கடுமையாக விமர்சிக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சமீபத்தில் “அப்பா” திரைப்படத்தை பார்த்து பாராட்டியதாக செய்தி வந்தது.  சில நாட்களுக்கு முன், “தர்மதுரை” படத்தை குடும்பத்தினருடன் பார்த்து பாராட்டு தெரிவித்தார் ராமதாஸ்.
அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சமீபத்தில் கபாலி படத்துக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று “ஜோக்கர்” திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார்.
ஜோக்கர் பட சிறப்புக் காட்சியை நேற்று, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில்  பார்த்த அவர், படம் முடிந்ததும் அவர் பேசியதாவது:
“ஜோக்கர் படத்தில் தன் காதலன் வீட்டில் கழிப்பறை வசதி இருந்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று நிபந்தனை விதிக்கிறாள். இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் கிராம புறங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்ட படுகிறார்கள் என்று நாம் இதில் பார்க்கிறோம். ஆண்கள் இதை எப்படியோ சமாளித்து கொள்கிறார்கள் பெண்கள் இதை வேதனையாகவே வலியாகவே ஏற்றுகொண்டு இருக்கிறார்கள்.
 

திருமாவளவன், இயக்குநர் ராஜூ முருகன், பாடலாசிரியர் .யுகபாரதி
திருமாவளவன், இயக்குநர் ராஜூ முருகன், பாடலாசிரியர் .யுகபாரதி

இப்படிப்பட்ட ஒரு அவலத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும் இதற்காக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதிலும் ஊழல் நடைபெறுகிறது என்பதை சுட்டிக்காட்டி அந்த ஊழலையும் உடைத்தெறிய வேண்டும் என்றும் இப்படத்தை ராஜு முருகன் இயக்கி இருக்கிறார்.
கதாநாயகனாக வருகிற குரு சோம சுந்தரம் சராசரி மனிதனாக இல்லாமல் மனநலம் பாத்திக்கப்பட்ட மனிதன் போல் நடந்து கொள்கிறார்.  இது தான் இப்படத்தின் மிக முக்கிய அம்சமாகும். மனநலம் பாதிக்கப்படவனாக அல்லது பிறரால் இவன் ஒரு ஜோக்கர் என்று பார்க்ககூடிய வகையில் அந்த கதாபாத்திரத்தை படைத்திருப்பதுதான் இயக்குநர் ராஜு முருகன் அவர்களின் செயல் தந்திரம்… அல்லது ஒரு தொழில் நுட்பம்.
அப்படி ஒரு கதாபாத்திரத்தை அமைத்ததால்தான் அவரால் இப்படி ஒரு செய்தியைப் பேச முடிந்தது. அரசாங்கத்தை, அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் அதனால் விளைகிற ஊழல் போன்ற தீங்குகளையும் மிகத் துணிச்சலாக இந்தப்படத்தில் பேசி இருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் ஒவ்வொரு போராட்டமும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு போராட்டத்தையும் ஒரு கோணத்தில் பார்க்கின்றபோது கேலிக்குரியதாக இருக்கிறது என்றாலும் இதை எப்படியாவது சொல்லித்தான் தீரவேண்டும், இந்த பிரச்சனைகளை பேசித்தான் தீர வேண்டும் என்பதற்கு இந்த ஜோக்கர் இயக்குநருக்கு தேவைப்படுகிறார். இந்த ஜோக்கர் அவருக்கு கை கொடுத்திருக்கிறார். ராஜு முருகனின் யுக்தியை நாம் நெஞ்சார பாராட்ட வேண்டும்.
நாம் எப்போதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். அரசியல் சக்தியாக இருந்து போராட வேண்டும் என்பதை நமக்கு படம் நினைவுபடுத்துகிறது. இயக்குநருக்கு மிகச் சிறந்த அரசியல் புரிதலும், தொலைநோக்குப் பார்வையும், சமூக சிந்தனையும், மக்கள் நலனில் அக்கறையும்  இருக்கிறது என்பதை இந்தப் படத்தின் மூலம்  பதிவுசெய்துள்ளார்.
இந்த இளம் இயக்குநர் இன்னும் பல மகத்தான சாதனைகளைப் படைக்க வேண்டும். இந்தப் படம் ஒரு மௌனப் புரட்சியை செய்து கொண்டு இருக்கிறது. மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் சமூக தளத்தில் அரசியல் தளத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாழ்க இளம் இயக்குநர் ராஜு முருகன் மற்றும் அவரோடு கைகோர்த்து களமாடிய அனைத்து கலைஞர்களும்,” என்று திருமாவளவன் பேசினார்.
நடிகர் தனுஷூம், “ஜோக்கர்” படத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார்.