டில்லி

கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பணி இழந்தோருக்காக வேலைவாய்ப்பு தளங்கள் சேவையை மேம்படுத்தி வருகின்றன.

கொரொனா வைரஸ் தாக்கம் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய தாக்குதலை ஏற்படுத்தி உள்ளது.   கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து தொழில் மற்றும் வர்த்தகம் முழுமையாக முடங்கிப் போனது.    இதனால் ஏராளமானோர் பணி இழந்துள்ளனர்.   இந்த பணி இழப்பு விமானப் பயணம், ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மிகவும் அதிகமாக உள்ளன.

கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன் தொழில்நுட்பம் அல்லாத ஊழியர்கள் 3000 பேர் பணி இழந்துள்ளனர்.  இவர்களில் நிதி நிறுவனமான இந்தியா புல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் ஆவார்கள்   வாடகைக்கார் மற்றும் உணவு வழங்கும் நிறுவனமான உபேர் 600 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது.  இதைத் தவிர விப்ரோவில் சுமார் 500 பேர் பணி இழந்துள்ளனர்.

எனவே இவர்களுக்கு உதவ வேலைவாய்ப்புத் தளங்கள் முன் வந்துள்ளன.  கொரோனாவால் பணி இழந்தோருக்கு விண்ணப்ப விவரங்கள் அமைப்பதிலும் வேலை அளிப்போரிடம் தொடர்பு ஏற்படுத்துவதிலும் பல இலவச சேவைகளை அளிக்க முன் வந்துள்ளன.   இண்டீட்.காம், நௌக்ரி.காம் மற்றும் மான்ஸ்ட்ர்.காம் உள்ளிட்ட பல தளங்கள் பணியைத் தொடங்கி உள்ளன.

நொய்டா நகரத்தில் உள்ள நௌக்ரி.காம் இணைய தளம் லே ஆஃப் காரணமாக பணி இழந்தவர்களுக்கு உதவத் தனிப் பிரிவை ஏற்படுத்தி உள்ளது.  இதில் விண்ணப்ப விவரம் உருவாக்க யோசனைகள், அந்த விவரங்களின் அடிப்படையில் வேலை வாய்ப்பை தேடுதல் எனச் சேவைகளைத் தொடங்கி  உள்ளது. இந்த விண்ணப்பதார்கள் உடனடியாக தயார் நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மான்ஸ்டர்.காம் இணைய தளமும் இதைப் போன்றே சேவைகளைத் தொடங்கி உள்ளது.   தற்போது கொரோனா தாக்கம் மேலும் மேலும் அதிகரிப்பதால் இந்த இணைய தளத்தில்  வீட்டில் இருந்தே பணி புரியும் வாய்ப்புக்கள் குறித்து அதிக அளவில் அறிவிப்பு வெளியாகின்றன.  இண்டீட்.காம் இதே சேவையை உலக அளவில் செய்யத் தயாராக தங்கள் இணைய தளத்தை மாற்றி உள்ளது.

இதைப் போல் லின்க்ட் இன் இணைய தளம் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றது.   இதைத் தவிர தற்போது காலியாகி வரும் முக்கிய பணிகளின் விவரங்களை அளிக்கும் நிறுவனத் தலைவர்களின் அறிக்கைகளை உடனடியாக வெளியிட்டு வருகிறது.

மொத்தத்தில் ஊரடங்கால் பணியில் இருந்து அனுப்பப்படும் ஊழியர்கள் ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் பணி புரிய போதிய ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது.  எனவே இந்த வேலைவாய்ப்பு தளங்கள் முதல் கட்டமாக கொரோனாவால் பணி இழந்தோருக்கு பணியைத் தேடித் தரும் சேவையை அதிக அளவில் கவனித்து வருகின்றன.