கல்வான்
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியச் சீன எல்லைப்பகுதியான லடாக் யூனியன் பிரதேசம் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு பதில் இந்தியாவும் தனது வீரர்களை குவித்தது, இதனால் பதட்டம் ஏற்பட்டதால் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் தீர்வு காண முடியவில்லை. எனவே கடந்த 6ஆம் தேதி அன்று உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் பேச்சு வார்த்தை நடந்தது.
அந்த பேச்சு வார்த்தையின்படி சீனப்படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளச் சீன அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென சீனப் படைகள் இந்தியப் படைகள் மீது நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் பழனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த அஹ்டாக்குடலில் சுமார் 20 வீரர்கள் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 1975 ஆம் வருடம் சீன எல்லையில் அசாம் ஆயுதப் படை வீரர்கள் 4 பேர் சீனா நடத்திய தாக்குதலில் மரணம் அடைந்தனர். அதன் பிறகு நடந்த மிகப் பெரிய மோதல் இதுவே ஆகும். இது குறித்து நேற்று காலை வெளியான அறிக்கையில் சீன வீரர்கள் திரும்பிச் செல்லும் போது கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் மரணம் அடைந்ததாகவும் பேச்சு வார்த்தைகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மாலை வெளியான மற்றொரு அறிக்கையில் இந்த மோதலில் 20 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 17 பேருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் கடும் குளிர் உள்ளதால் காயமடைந்தோர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூத்த அரசு அதிகாரி ஒருவர், “கடந்த மாதத்தில் இருந்தே சீன வீரர்கள் முகாம் இட்டு தங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டுள்ளனர். இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் பக்கத்தை வலுப்படுத்தும் பணியில் முழு அளவில் சீன வீரர்கள் ஈடுபட்டனர். அத்துடன் பாங்காங் ஏரிப்பகுதியில் முகாம் இட்டுள்ள சீன வீரர்கள் அங்கிருந்து இன்னும் செல்லவில்லை.
அது மட்டுமின்றி கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரிப்பகுதி எனப் பல இடங்களில் சீன ராணுவம் முகாம் இட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்கள் ஒரு இடத்தை பாதுகாக்க முயலும் போது சீன ராணுவம் மற்றொரு இடத்தில் தாக்குதல் நிகழ்த்துகிறது. மேலும் தற்போது தவுலத் பெக் பகுதியில் சீனா முகாம் இட தொடங்கி உள்ளது. எனவே இந்திய ராணுவம் அங்கும் படைகளை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.