டில்லி

வகர்லால் நேரு தேசிய பல்கலைக்கழகம் பக்கோடா விற்று போராடிய நான்கு மாணவர்களுக்கு தலா ரூ.20000 அபராதம் விதித்துள்ளது.

டில்லியில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு தேசிய பல்கலைக்கழகத்தில் வகுப்புக்களுக்கு வருகை புரிய வேண்டிய நாட்களை குறைக்க வேண்டும் என  மாணவர்கள் போராடி வருகின்றனர்.   இந்தப் போராட்டத்தில் ஒரு பகுதியாக நேற்று மாணவர்கள் மனிதச் சங்கிலி  போராட்டம் நடத்தினார்கள்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மோடி பக்கோடா விற்பதும் ஒரு வேலை வாய்ப்பு எனக் கூறியதற்கு நாடெங்கும் போராட்டம் நடைபெறுவது தெரிந்ததே.  ஜவகர்லால் நேரு தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் மோடியைக் கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டத்துடன் பக்கோடா விற்கும் போராட்டமும் நடத்தினர்.    இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த மாதம் 5ஆம் தேதியில் இருந்து நீங்கள் போராட்டம் என்னும் பெயரில் நிர்வாக கட்டிடம் மற்றும் சபர்மதி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து வருகிறீர்கள்.   இதனால் மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள்,  பள்ளி மாணவர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு கடும் சிரமம் உண்டாகிறது.   மாணவி விடுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களும் பாதிக்கப்படுகிறது.

தவிர நீங்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் உணவுப் பொருட்களை சமைப்பது தவறானது. 

இவை கூடாது என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியும் இதை எல்லாம் செய்துள்ளீர்கள்.    அத்துடன் உங்கள் போராட்டத்தின் போது இரவில் திரைப்படம் பார்க்க மின்சார ஒயரை அமைத்துள்ளீர்கள்.   இவை எல்லாம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒழுக்க விதிகளுக்கு மாறானது.     போராட்ட இடத்தை விட்டு வெளியேறுமாறு பல முறை உங்களுக்கு கூறியும் நீங்கள் வெளியேறவில்லை.

இதனால் பல்கலைக்கழக துணை வேந்தர் ஒவ்வொருவருக்கும் ரூ. 20000 அபராதம் விதித்துள்ளார்.  

நீங்கள் தற்போதுள்ள விடுதியில் இருந்து வேறு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளீர்கள்.    போராட்டத்தை முன்னிருந்து நடத்திய விகாச் யாதவ் உள்ளிட்டோருக்கு இன்னும் இரண்டு செமஸ்டருக்கு விடுதியில் தங்க அனுமதி மறுக்கப்படுகிறது”  எனக் கூறப்பட்டுள்ளது.