ரிலையன்ஸ் ஜியோ 4ஜி தந்த இலவச சலுகை வரும் டிசம்பர் 3-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சலுகையை மார்ச் 2017 வரை நீட்டிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ராய் விதிகளின்படி எந்த டெலகாம் ஆபரேட்டரும் தாங்கள் வழங்கும் சலுகையை 90 நாட்களுக்கு மேல் நீட்டிக்கக் கூடாது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் தனது 100 மில்லியன் இலக்கை எட்டும் நோக்கில் இலவச சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க சட்ட ரீதியான வழிகளை ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.
ஏற்கனவே ஜியோ அறிவித்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க இயலாத அளவுக்கு தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த சலுகைகளுக்கு கட்டணம் விதிப்பது நியாயமல்ல எனவே தாங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாதபடிக்கு போட்டி நிறுவனங்கள் தந்த பிரச்சனைகளால் தாங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த சலுகையை நீட்டிக்க தங்களுக்கு தார்மீக உரிமை உண்டு, அதற்கு ட்ராயின் அனுமதியை பெற தேவையில்லை என்று ரிலையன்ஸ் ஜியோவின் செய்தி தொடர்பாளர் அனுஷ்மன் தாகூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒருவேளை இதற்கு ட்ராய் அனுமதிக்காத பட்சத்தில் ரிலையன்ஸ் ஜியோ “வெல்கம் ஆஃபர்” என்ற பெயரை மாற்றி வேறு பெயர் வைத்து சலுகையை தொடரவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.