சென்னை,

ஜெயலலிதா கைரேகை தொடர்பான  வழக்கில் டிச.8ந்தேதி  பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் ஆஜராக வேண்டும்  என சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்த லில், வேட்புமனு  தாக்கல் செய்யும் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பான விசாரணைக்கு பெங்களூர் பரபரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் ஆஜராக வேண்டும் என்று சென்றை ஐகோர்ட்டடு அதிரடியாக அறிவித்து உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர்  சரவணன், ஜெயலலிதா கைரேகை குறித்து வழக்கு தாக்கல் செய்தார். அதில்,  ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார்.

ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலராகப் பணியாற்றிய ஜீவா சாட்சியம் அளித்துள்ளார். தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில்,  கடந்த 13ம் தேதி  இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளரான வில்ஃபிரட் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது, மருத்துவ சான்றிதழ்கள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிக்கு, அதிமுக அவைத்தலைவ ராக இருந்த  மதுசூதனன் அளித்த ஒப்புதலின் பேரிலேயே  கைரேகைப் பதிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது என வில்ஃப்ரெட் பதில் கூறினார்.

இந்நிலையில், அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை பார்க்க யாரையுமே அனுமதிக்காத நிலையில், அவரைப் பார்த்து அவரிடம் கைரேகை பெற்று அதற்கு ஒப்புதல் அளித்த டாக்டர் பாலாஜியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் சரவணன் மீண்டும் ஒரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஜெயலலிதா கைரேகை வழக்கில் மருத்துவர் பாலாஜி ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அதன்படி இன்று வழக்கு விசாரணைக்காக டாக்டர் பாலாஜி கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், தற்போது, பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் தனி நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து சிறை அதிகாரிகள் கைரேகை, கையெழுத்து பெற்றிருப்பார்கள். இது சிறைத்துறையின் நடைமுறை.

அதன் காரணமாக, தற்போது ஜெயலலிதா கைரேகை குறித்த வழக்கில், பெங்களூரு சிறையில் ஜெயலலிதாவிடம் இருந்து பெறப்பட்ட கைரேகை உள்பட ஆவனங்களை தாக்கல் செய்ய பெங்களூரு பரபரப்பன அக்ரஹாச சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

அடுத்த மாதம் 8ந்தேதி நடைபெற உள்ள விசாரணையின்போது அவர் ஆஜராகி, ஜெயலலிதா சிறைசென்றபோது அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட கைரேகை உள்ளிட்ட ஆவனங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்யும் ஆவனங்களை பொறுத்தே  வழக்கின் போக்கு இருக்கும் என நம்பப்படுகிறது.

திமுகவினர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கு பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.