சென்னை :

றைந்த ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில், அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், ஜெ. மரணம் தொடர்பாக மருத்துவர்கள், அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து  அப்பல்லோ நிர்வாகமும், எய்ம்ஸ் மருத்துவர்களும் அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் 2 சூட்கேசில் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தது.  அதையடுத்து நேற்று  எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகமும்  அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா? என்பதை அறிந்து கொள்வ தற்காக ஆணையத்துக்கென்று தனியாக மருத்துவர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு  சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்க டில்லி எய்ம்ஸ்  மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ துறை பேராசிரியர் ஜி.சி. கில்நானி, மயக்கவியல்துறை பேராசிரியர் அஞ்சன் திர்கா மற்றும் இருதயவியல் சிறப்பு நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழு  கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 6ந்தேதி  சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.