பாட்னா

பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பு ஏற்க ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தது.  நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி ஏற்றார்.  அவருடன் அமைச்சர் பதவி ஏற்ற 13 பேர்களில் ஐ ஜ த கட்சியில் மேவாலால் சௌத்ரியும் ஒருவர் ஆவார்.  கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர் இதற்கு முன்பு பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த போது அவர் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் இதைக் காரணம் காட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பினார்.  அதைத் தொடர்ந்து இரண்டே நாட்களில் சவுத்ரி ராஜினாமா செய்தார்.   இது ஐக்கிய ஜனதா தளம் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மிகவும் அதிருப்தியை அளித்தது.

இந்த தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற ஒரே கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.  இதற்கு ஐ ஜ த கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  தேஜஸ்வி யாதவ் மீதும் ஊழல் வழக்குகள், எஸ்சி எஸ்டி பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளதைச் சுட்டிக் காட்டிய ஐஜத கட்சியினர் ஊழல் குற்றம் காரணமாக சவுத்ரி பதவி விலகக் கோரிய தேஜஸ்வி எவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க முடியும் எனக் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.