கொல்கத்தா

காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும், உபத்திரவம் செய்யக் கூடாது என கூறி உள்ளார்.

முந்தைய காங்கிரஸ் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தவர் ஜெய்ராம் ரமேஷ்.    இவர் நேற்று கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் நிறுவனம் நடத்திய இலக்கியக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.   அப்போது அவர் காங்கிரஸில் இளைஞர்கள் அதிகம் பங்கேற்பது குறித்து தனது உரையில் தெரிவித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ், “குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளில் இருந்து காங்கிரஸ் மீண்டும் வருவதை மக்கள் விரும்புவது தெரிந்துள்ளது.   ராகுல் காந்தியின் தலைமையை மக்கள் மிகவும் விரும்புகின்றனர்.   இனி இளைஞர்கள் காங்கிரஸ் தலைவர்களாக வேண்டும் என விரும்பி வருவது நன்கு புரிந்துள்ளது.    ஏற்கனவே கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக செய்த சில மோசமான தந்திரங்களால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது.

குஜராத் தேர்தலுக்கு முன்பிருந்த ராகுலுக்கு,   அதற்குப் பின் இருந்த ராகுலுக்கும் நல்ல வித்யாசம் தெரிகிறது.   அவர் இப்போது முழு நேர அரசியல்வாதியாக முழுத் தகுதி பெற்று விட்டார்.    அவருக்கு கீழ் பணி புரிய இளைஞர்கள் தயாராக உள்ளனர்.   அவர்களுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் முழு ஆதரவை அளிக்க வேண்டும்.   இளைஞர்களுக்கு அவர்கள் உதவி புரிய வேண்டும்.  உபத்திரவம் செய்ய வேண்டாம்.

முன்பு இருந்த வாஜ்பாய் – அத்வானி கால பாஜக போல தற்போதைய மோடி – அமித்ஷா பாஜக கிடையாது.     நமது கலாசாரத்துக்கு ஒத்து வராத படி மோடியும் அமித்ஷாவும் அரசியல் நடத்தி வருகின்றனர்.    நாம் பல நாட்களாக ஆளும் கட்சியில் இருந்ததால் எதிர்க்கட்சியாஅக எப்படி இருக்க வேண்டும் என்பது நமக்கு தெரியவில்லை.  அதை மாற்றி ஆக வேண்டும்.   வீதியில் இருந்து போராட தயங்கக் கூடாது. ”  என கூறி உள்ளார்.