சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவரது மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.

இந்த விசாரணை கமிஷனை ரத்து செய்யக் கோரி  சென்னை ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் விஜயன்   விஜயன் முறையீடு செய்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதா கடந்த ஆண்டு செப் 22-ம் தேதி உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் குணமாகி வருவதாக அமைச்சர்கள், மருத்துவமனை நிர்வாகம் சொல்லி வந்த நிலையில், திடீரென  கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அவர் மரணமடைந்தார்.

அவர் மரணம் வரை அவரது சிகிச்சை குறித்த எந்தவித புகைப்படங்களும் வெளியாகவில்லை. இதன் காரணமாக அவரது மரணத்தில்  பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பொதுமக்கள் கருதினர்.

இதேபோல் அதிமுகவில் இருந்து தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் தெரிவித்து வந்தார். இந்நிலையில் அதிமுக இணையவேண்டுமானால் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அதைத்தொடர்ந்து இரு அணிகளும் இணைப்புக்கு அச்சாரமாக ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. அவர் எழிலகத்தில் கடந்த சனிக்கிழமை விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதை  ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஜயன் முறையீடு செய்தார்.

இதை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதையடுத்து இந்த வழக்கு குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.