சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆய்வு செய்துவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய செயலாளர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபு நியமிக்கப்பட்டு உள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமா தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணை யத்தை கடந்த அதிமுக அரசு அறிவித்தது. இந்த விசாரணை ஆணையம் அமைய காரணமாக இருந்த ஓபிஎஸ், சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தான் ஏற்கனவே கூறிய கருத்துக்கு எதிராக பல்டி அடித்தார். சசிகலாவுக்கும் ஜெ.மரணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில்,  ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்றதால்  செயலாளர் இல்லாமல் நடந்து வந்த நிலையில், புதிய செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த வாரம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணை என்ன என்பது குறித்து இன்று ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆணைய தரப்பு, சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.