சென்னை:

.தி.மு.க. அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளரார் பொறுப்பில் டி.டி.வி தினகரன் தொடர முடியாத சூழல் ஏற்பட்டால் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இங்க அக் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக அக் கட்சி வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இதற்கு ஆதரவாக இருந்த ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் பிறகு தனி அணியாக பிரிந்து, இதை எதிர்க்கிறார்கள்.

அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் இணைந்தே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சசிகலா அப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் கேட்டு இரு தரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இருதரப்பும் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் வரும் 17ம் தேதி இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. விசாரணையின் முடிவில் சசிகலா, பொதுச்செயலாளர் பதவி வகிக்கமுடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டால் அந்த அணி பெரும் சிக்கலை சந்திக்கும்.

அதாவது அப்படியோர் நிலை ஏற்பட்டால் சசிகலாவால் கட்சியில் சேர்க்கப்பட்டு துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனின் நியமனமும் செல்லாததாகிவிடும்.

ஆகவே தற்போதுபோல தினகரனால் கட்சியை வழி நடத்த முடியாது. அந்த நிலையில் தலமைப்பொறுப்புக்கு யாரைக்கொண்டுவருவது என தினகரன் தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டது. பலரது பெயர் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் பெயர்கள் இருந்தன.

தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். ஆகவே இரு பொறுப்புகளிலும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர் இருந்தால் மற்ற இனத்தவரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து டிடிவி தினகரன் கட்சிப் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டால் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இயங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது என்று சசிகலா அணி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

“வெளிப்பார்வையாக்கு யார் வேண்டுமானாலும் தலமையில் இருக்கலாம். இயக்கப்போவது தினகரன்தானே” என்ற பேச்சும் அங்கு அடிபடுகிறது.