சென்னை:  அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருதுராஜ் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

வரும் 11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,  ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதால், இந்த முறை முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாகவும், உரிய பாதுகாப்பு வழங்குவதாக டிஜிபி உறுதி யளித்தார்  என்றும் தெரிவித்தார்.

மேலும், பொதுக்குழு கூட்டம் அன்று அரசு அறிவிக்கும் கொரோனா விதிமுறைகள்  பின்பற்றப்படும் என கூறிய ஜெயக்குமார், பொதுக்குழுவை நடத்தவிடாமல் செய்ய சமூக விரோதிகள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது  என்பதால், பாதுகாப்பு  கேட்கப்பட்டு இருப்பதாகவும், சட்டதிட்டங்களின் படி அதிமுக பொதுக்குழு முறையாக நடைபெற்றதாக தெரிவித்தார்.

ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  கட்சி விதிமுறைகளை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும், தொண்டனுக்கு ஒரு விதி, நிர்வாகிகளுக்கு ஒரு விதி என தனித்தனியாக எதுவும் இல்லை என்றார்.

5ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுகிறது என்று கூறியவர், முறைப்படி கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பும், வரைவுத் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது என்றும் கூறினார்.

மருது அழகுராஜ் குறித்த கேள்விக்கு பதில் கூறியவர்,  பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் மருது அழகுராஜ் செயல்பட்டு வருகிறார் என்றவர்,  கூலிக்கு மாரடிக்கும் வேலையைத்தான்  மருத அழகுராஜ் செய்துகொண்டு உள்ளார் .

மருது அம்மா நாளிதழில் நிதி கையாடலில் முறைகேடாக செயல்பட்டதின் காரணமாக மருது அழகுராஜ் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். பல கட்சிகளுக்கு சென்ற மருது அழகுராஜ், தற்போது கூலிக்கு மாறடிக்கும் செயலாக ஓபிஎஸ் -க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

பொதுக்குழு கூட்டத்தில் அடையாள அட்டை இல்லாத யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே சட்டிவிதிகள்படி பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது. ஆனால் பொதுக்குழு கூட்டம் குறித்து மருது அழகுராஜ் தவறாக பேசியுள்ளார். அவரது பேச்சு தொண்டர்களை கோவபடுத்தி உள்ளது. எங்கள் பக்கம் நியாயம் உள்ளதால் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என கேள்வி எழுப்பியவர், அவர் கட்சிக்காக தியாகம் செய்துள்ளாரா? ஜெயிலுக்கு சென்றிருக் காரா? என கேள்வி எழுப்பியுள்ளார். எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் விசுவாசம் கொண்டவரா என்றால் அதுவும் இல்லையென தெரிவித்தார்.

கொடநாடு கொலை கொள்ளையை பொறுத்தவரை தவறு செய்தவர்களை போர்கால அடிப்படையில் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அப்படி தொடர் குற்றங்களை செய்தவர்களை ஜாமீனில் எடுத்தது திமுக ன். எங்கள் மடியில் கனம் இல்லை அதனால் பயம் இல்லை. எந்த வழக்கையும் பார்த்து அதிமுக பயப்படாது. எந்த வழக்கையும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.

ஓபிஎஸ் கட்சி விரோத செயலில் ஈடுபட்டு வருகிறார். சசிகலா மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தினகரனை ரகசியமாக சந்திக்கிறார். அவருடைய மகன் திமுகவிற்கு ஆதரவாக பேசுவதை தொண்டர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். திமுகவின் B – டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். கட்சியை முடக்கும் செயலிலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் அவரை தொண்டர்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஜூலை 11ஆம் தேதி நிச்சயம் பொதுக்குழு நடைபெறும். சசிகலா மற்றும் தினகரன் அதிமுக கட்சிக்கு திரும்ப முடியாது. அவர்கள் வேன் எடுத்துகொண்டு ஊர் ஊராக செல்வது நேர விரயம்; பண விரயம்; ஆற்றல் விரயம்; பெட்ரோல் விரயம். அவ்வளவுதான் எனத் தெரிவித்தார்.