லிமா: கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, 7 மாதங்களுக்குப் பிறகு, பெரு நாட்டிலுள்ள மலைமீது அமைந்த புகழ்பெற்ற சுற்றுலா தலமான மகு பிக்கு என்ற இடத்திற்கு தனியாக சென்ற முதல் மனிதரானார் ஜெஸ்ஸி கடயாமா என்ற ஜப்பான் நாட்டவர்.
கொரோனா ஊரடங்கு உலகெங்கிலும் துவங்கியதிலிருந்து, பல தேசத்தவரும் பல நாடுகளில் சிக்கிக்கொண்டனர். விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டதால், தங்களின் தாயகத்திற்கு பலரால் திரும்ப முடியவில்லை.
இப்படித்தான் கடயாமாவும் பெரு நாட்டில் சிக்கிக் கொண்டார். அவருக்கு மகு பிக்குவில் ஏறுவது என்பது முக்கியமான லட்சியம்! இந்நிலையில், அவர் பெரு அரசுக்கு, தன்னை அங்கே ஏறுவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், அவரின் விருப்பம் கருதி அனுமதியளிக்கப்பட்டது. இதன்மூலம், கடந்த 7 மாதங்களில், தனியாளாக அந்த இடத்தை சென்றடைந்த முதல் மனிதரானார் கடயாமா.
கடயாமாவிற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதியின் மூலம், அவர் தனது தாய்நாடு திரும்புவதற்குள் தனது விருப்பத்தை பூர்த்திசெய்துகொள்ள முடிந்தது என்று பெரு சுற்றுலாத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.