டில்லி:

ஜப்பானில் திடக்கழிவு அழிப்பு அறிவியல் பூர்வமாக கையாளப்படுகிறது. இந்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சக அதிகாரிகள் இந்த முறையை ஆய்வு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்று அத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலும் திடக்கழிவுகள் அறிவியல் பூர்வமான முறையில் அழிக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கழிவு மேலாண்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. 2001ம் ஆண்டில் நகர் புற இந்தியர்கள் 3.10 கோடி டன் குப்பைகளை உற்பத்தி செய்தனர். இது 2017ம் ஆண்டில் 4.70 கோடி டன்னாக உயர்ந்தது. 2041ம் ஆண்டில் இது 16.10 கோடியாக அதிகரிக்கும் என் கணக்கிடப்பட் டுள்ளது. 40 ஆண்டுகளில் சுமார் 5 மடங்கு உயர்வை சந்திக்கவுள்ளது.

ஜப்பானில் உற்பத்தியாகும் குப்பைகளில் 12.5 சதவீதம் அதாவது 8ல் ஒரு பங்கு மட்டுமே நிலப்பரப்பில் கொட்டப்படுகிறது. மீதமுள்ளவை எரித்து அழிக்கப்படுகிறது. 1.30 கோடி மக்கள் தொகையை கொண்ட டோக்கியோ 2014ம் ஆண்டில் 20.7 லட்சம் டன் கழிவுகளை உற்பத்தி செய்தது. 1989ம் ஆண்டில் 40.9 லட்சம் டன் என்ற நிலையில் இருந்து குறைந்துள்ளது.

குப்பை சேகரிப்பு கையேடு

ஜப்பான் மக்களுக்கு குப்பைகளை பிரிப்பது குறித்து 27 பக்கம் அடங்கிய கையேடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 500 பொருட்களை எந்த விதத்தில் பிரிப்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டு குப்பைகளில் எரிப்பவை, எரிக்க கூடாதவை, மறுசுழற்சிக்கு ஏற்றவை போன்று பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளை குறிப்பிட்ட இடைவேளையில் குப்பை வாகனங்கள் மூலம் சேகரி க்கப்படுகிறது. எரிக்க கூடிய குப்பைகள் வாரத்தில் 2 நாட்களும், எரிக்க கூடாத குப்பைகளை 15 நாட்களு க்கு ஒரு முறையும், மறுசுழற்சி கொண்ட குப்பைகளை வாரத்திற்கு ஒரு முறையும் சேகரிக்கப்படுகிறது.

எரிக்கப்படும் குப்பைகள்

எரிக்க கூடிய குப்பைகளை டோக்கியோவின் முக்கிய பகுதிகளில் உள்ள 19 எரியூட்டும் நிலையங்களில் கொட்டப்படுகிறது. முதலில் குப்பை எடை போடப்பட்டு நீண்ட நாட்களுக்கு பாதுகாத்து வைக்க கூடிய ஒரு பெட்டகத்துக்கு அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் 850 முதல் 950 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் ஒரு உலையில் எரிக்கப்படுகிறது. எரிக்கும் போது வெளியேறும் வாயு குளிரூட்டப்பட்டு காற்றில் வெளியேற்றப்ப டுகிறது. இதில் மீதப்படும் சாம்பல் சிமென்ட், செங்கல் போன்ற கட்டுமான பொருட்கள் தயாரிக்க பயன்ப டுத்தப்படுகிறது.

எரிக்கப்படாத குப்பைகள்

எரிக்கப்படாத குப்பைகள் தனி நிலையங்களில் வைத்து கிரஷர் எந்திரங்கள் மூலம் பல துகள்களாக நொறு க்கப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் உலோக பொருட்கள் காந்தம் மூலம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய அளவிலான பர்னிச்சர்கள் கூட இந்த நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு உடைக்கப்படுகிறது. அதன் பின்னர் அது எரிக்கவோ அல்லது நிலப்பரப்புக்கோ அனுப்பப்படுகிறது.

நிலத்துக்கு அடியில் குப்பை கிடங்கு

இந்தியாவில் நிலத்தின் மேற்பரப்பில் குப்பைகள் மலை கோல் குவித்து வைக்கப்படுகிறது. ஆனால், ஜப்பானில் நிலப்பரப்புக்கு அடியில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுசுழற்சியாகும் குப்பைகள்

ஜப்பானில் குப்பை மறுசுழற்சி மையங்கள் தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. இந்த ரக குப்பைகளை மக்களிடம் இருந்து நேரடியாக சேகரித்து கொள்கின்றன. இந்த மையங்களோடு எரியூட்டு மையங்களும் உள்ளது. கண்ணாடி அடைப்பான், பிளாஸ்டிக் டப்பாக்கள், அலுமினிய ஜாடி, டப்பா, பேப்பர் பேக்கிங், கார் டுபோர்டு, உணவு தட்டு உள்ளிட்டவை மறு சுழற்சி செய்யப்படுகிறது.