சென்னை:

இலங்கையில் தமிழர்கள் போரிட்டதுபோல  தமிழ்நாட்டிலும் போர் நடத்த வேண்டியிருக்கும் என்று மத்திய அரசை பா.ம.க. இளைஞரணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி எச்சரித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோரை காவல்துறயினர் கைது செய்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் அன்புமணி பேசினார். அப்போது அவர்,  “தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைவரின் ஆதரவுடன் இந்த போராட்டம் நடைபெறகிறது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜ.க. அரசு துரோகம் இழைத்து வருகிறது.

காவிரி தமிழகத்தின் உரிமை பிரச்சனை, இதை விட்டுக்கொடுக்க மாட்டோம். கர்நாடகா மக்களுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது. காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்கள் கொந்தளித்துபோய் இருக்கின்றனர்.  அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்றெல்லாம் சொல்லி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது.

தமிழ்நாடு மாநில அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறது. இங்கே இருப்பவர்களுக்கு பதவிதான் முக்கியம். ஆகவே பயந்து கொண்டு இருக்கிறார்கள்.

அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டால் தர மறுக்கின்றனர். இது ஏமாற்று வேலை.

கடல் கடந்து தமிழர்கள் போர் நடத்திய வரலாறு உலகுக்கு தெரியும். தமிழர்களை போர் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளாதீர்கள். வன்முறையின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு எல்லைக்கு மேல் அமைதியாக போராட்டங்களை நடத்த முடியாது. எங்களை அடுத்த கட்டத்துக்கு தள்ளிவிடாதீர்கள்” என்று அன்புமணி ராமதாஸ் மத்திய அரசை எச்சரித்தார்.