டோக்கியோ

ஜப்பான் அனுப்பிய விண்கலம் நிலவில் தரை இறங்கி உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகள் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி ஆய்வு செய்யும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் இதில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது இந்த வரிசையில் ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) நேற்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது.

ஜப்பான் துல்லிய தரை இறக்கம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த லேண்டரை தரை இறக்கியது.  இதனால் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவைத் தொடர்ந்து 5 ஆவது நாடாக ஜப்பானும் நிலவில் தரை இறங்கி சாதித்து உள்ளது. விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரை இறங்கினாலும், அதன் செயல்பாட்டு நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஜப்பான் விண்வெளி நிலையம் தனது எக்ஸ் வலைத்தளத்தில்,

”நிலவை ஆய்வு செய்வதற்கான ஸ்மார்ட் லேண்டர் (SLIM) ஜனவரி 20, 2024 அன்று காலை 12:20 மணிக்கு (JST) நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது என்பதை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) உறுதிப்படுத்துகிறது. தரையிறங்கிய பிறகு விண்கலங்களுடனான தொடர்பு நிறுவப்பட்டது. 

இருப்பினும், சூரிய மின்கலங்கள் தற்போது சக்தியை உருவாக்கவில்லை, மேலும் நிலவில் உள்ள SLIM இலிருந்து தரவு பெறுதலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவரை பெறப்பட்ட தரவின் விரிவான பகுப்பாய்வு எதிர்காலத்தில் நடத்தப்படும், அவ்வபபோது  நிலைமை குறித்த தகவல்களை  நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்.” 

என்று தெரிவித்துள்ளது.