சென்னை: தை 1ந்தேதி (ஜனவரி 15ந்தேதி) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் அறுவடை தினமான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் ஒவ்வொரு தமிழரும், தங்களது வீடுகளில் பொங்கலிட்டு, அறுவடைக்கு உதவிய ஐம்பூதங்களுக்கும் குறிப்பாக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபடுவர்.

இந்த நிலையில், பொங்கலன்று வீடுகளில் பொங்கல் வைக்கும் நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் ஆண் நாய் வாகனத்தில் வலம் வருகிறார். தை 1-ந் தேதி (திங்கட்கிழமை) சுக்ல பட்சம், சதுர்த்தி, சதய நட்சத்திரம் 2-ம் பாதம் வியதி பாத் நாம யோகம் பத்திரை நாம கரணம் செவ்வாய் ஓரை கூடிய இந்த நாளில் காலை 9.12 மணிக்கு தனுசு லக்னத்தில் செவ்வாய் நவாம்சையில் சித்தயோகத்தில் சூரிய பகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

அதனால், பொங்கல் திருநாளன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திரன் ஓரையில் மகர லக்னத்தில் புது பானையில் பொங்கல் வைக்க நல்ல நேரமாகும். இந்த ஆண்டு சித்தயோகத்தில் பிரவேசிப்பதால் எங்கும் நன்மை உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சூரியன் உதயமாகும் நேரம் என்பதால், சூரியனின் ஆசியை பொங்கல் பெறுகிறது.

பொங்கல் வைக்க உகந்த நேரம் தவிர, மற்ற நேரங்களில் பொங்கல் வைக்கலாம். ஆனால், ராகு காலம் மற்றும் எமகண்டம் ஆகிய நேரங்களில் பொங்கல் வைக்கக்கூடாது. ராகு காலம் என்பது காலை 7.30 மணி முதல் 9 மணி வரை உள்ளது. பின்னர்,  எமகண்டம் என்பது காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை உள்ளது. அதற்கு இடைப்பட்ட நேரங்களான காலை  9 மணி  முதல் 10.30 க்குள்ளும்  பொங்கல் வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.