நாகர்கோவில்:  நாகர்கோவில் திமுக மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், மாவட்ட காங்கிரஸ்  தலைவர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர்  4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருப்பவர் மகேஷ். இவர் திமுகவைச் சேர்ந்தவர். இவர்மீது பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. சமீபத்தில், அவரது வீடு அருகே உள்ள மூதாட்டி ஒருவரும் புகார் அளத்திருந்தார். தங்களது  ‘வீட்டு முன்பு பைக் நிறுத்துதை கண்டிப்பதாகவும், பைக்க  நிறுத்தக் கூடாது என தினமும் வந்து பிரச்னை செய்கிறார்கள்.  என் வீட்டு வாசலில் பைக் நிறுத்தக் கூடாது என சட்டத்தில் இடம் இருக்கிறதா என நான் கேட்டேன்’ என இந்த மூதாட்டி ஒருவர் கேள்வி எழுப்பியது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், நாகர்கோவில் பகுதியில் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, ஒருவர் அவரது காரை, மேயரின் காரை இடிப்பதுபோல சென்று நிறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்தன்று  நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மற்றொரு காரில்  அங்கு வந்த நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான நவீன்குமார் உள்பட மேலும் சிலர், அவர்களின் காரைக்கொண்டு, மேயரின் காரை இடிப்பது போல்  வந்து காரை  நிறுத்தியதாக தெரிகிறது.

இதை பார்த்த மேயரின் தபேதர் மணிகண்டன் (37) தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், தபேதர் மணிகண்டனையும், மேயரையும் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்தவர்கள், மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மேயரின் தபேதார்,  மணிகண்டன் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.