சென்னை: ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது

நடிகர் விஜய் நடித்துள்ள   ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ள  ‘ஜனநாயகன்’   திரைப்படம், பொங்கல் பண்டிகையை ஒட்டி  உலகமெங்கும் இன்று (ஜன.9) வெளியாவதாக இருந்தது.

ஆனால், படத்திற்கு தணிக்கை வழங்குவதில் இழுபறி ஏற்பட்டதால், படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடைசி நேரத்தில் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் மறுத்து விட்டது.

மத உணர்வை புண்படுத்தும் வகையில் வசனம் இருப்பதால் சென்சார் சான்று வழங்கவில்லை என தணிக்கை வாரியம் விளக்கம் அளித்தது. இதனால் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இதனிடையே, தணிக்கை வாரியத்துக்கு எதிராக ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தயாரித்த கே.வி.என் புரோடக்ஷன் நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி நிஷா பானு திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த 9 ஆம் தேதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தனர்.

தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவை எதிர்த்து ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை என்றும், வழக்கை விரைந்து நடத்தி தீர்ப்பளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம் ஶ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ”தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு முன் மறு ஆய்வு குழு பார்வைக்கு படத்தை அனுப்ப வாரிய தலைவருக்கு அதிகாரம் உள்ளது. மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்புவது நடைமுறையில் உள்ளது. விஜயின் ஜனநாயகன் படத்தை மட்டும் மறு ஆய்வு குழு பார்வைக்கு அனுப்பவில்லை.

தணிக்கை வாரிய சட்டப்படி, படத்திற்கு எதிராக ஆட்சேபம் இருந்தால், அதை குறைந்தது 7 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் பட நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி ஜனவரி 5 ஆம் தேதி பட தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது. சட்டப்படி படி 7 நாட்களுக்குள் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 6 ஆம் தேதி பட தாயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்த போது, இந்த படம் மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்பது பட நிறுவனத்துக்கு தெரியும். ஆனால் அவர்கள் மறு ஆய்வு செய்வதை எதிர்த்து வழக்கு தொடரவில்லை.

ஒரு திரைப்படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கவே குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது. சினிமோட்டோகிராஃபி விதிகளின் படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழ் வழங்க பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கும் அனுப்பலாம்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக படத்தை பார்வையிட்ட ஆய்வு குழு உறுப்பினர் புகார் அளித்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. சினிமோட்டோகிராஃபி சட்டப்படி 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படமாக இருந்தால் தணிக்கை வாரிய தலைவர் தான் இறுதி முடிவெடுக்க முடியும்.

படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன் பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என பட தயாரிப்பு நிறுவனத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டு சான்றிதழை தர வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் கேட்க முடியாது.

படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம் தான் இறுதி முடிவை அறிவிக்கும். ஆய்வுக் குழுவின் முடிவுகள், தணிக்கை வாரியத்தை கட்டுபடுத்தாது. ஆய்வுக் குழு படத்தை பார்த்ததால் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சான்றிதழ் வழங்குவதற்கு முன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப வாரிய தலைவருக்கு தன்னிச்சையாக அதிகாரம் உள்ளது.

சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவை எடுக்க மும்பையில் உள்ள தணிக்கை வாரியத்துக்கு தான் அதிகாரம் உள்ளது. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இல்லாவிட்டால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும். மறு ஆய்வு குழு சான்று வழங்க மறுத்திருந்தால் நீதிமன்றத்தை தயாரிப்பாளர் அணுகி இருக்கலாம்.

தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டு, படத்துக்கு UA 16+ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும்” என தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பிற்பகல் வாதம் தொடங்கியது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ”தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடன் இல்லை. முதலில் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்து விட்டு, திடீரென மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது சட்ட விரோதமானது.

திரைப்படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு வாரியம் தெரிவிக்கவில்லை. தணிக்கை வாரியத்தின் உத்தரவு இதுவரை வழங்கப்படவில்லை. தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் போதுமான மாறுதல்கள் செய்திருப்பதால் விதிகளின் படி, 2 நாட்களில் தணிக்கை சான்றிதழை வழங்கி இருக்க வேண்டும்.

சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவே அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் டிசம்பர் 29-க்கு பிறகு அனைத்தும் மறைக்கப்பட்டது. ஏற்கனவே படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட காட்சிகளையே மீண்டும் நீக்க வேண்டும் என ஆய்வு குழு உறுப்பினர் புகார் அளித்துள்ளார். அதை எப்படி மீண்டும் நீக்க முடியும்? என தெரிவிக்கப்பட்டது.

தணிக்கை வாரிய நடவடிக்கையால் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. படம் ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிடி நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே 22 நாடுகளில் படத்தை வெளியிட அனுமதி பெறப்பட்டது. படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க தணிக்கை சான்றிதழுக்காக காத்திருப்பது நடைமுறையில் வழக்கம் இல்லை” என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், படத்தை பார்த்து சான்றிதழ் வழங்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தணிக்கை வாரிய வழக்கறிஞர், “மும்பையில் உள்ள சென்சார் போர்டுக்கு தான் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் உள்ளது. இந்த படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், படத்திற்கு எதிராக யார் புகார் கொடுத்தது? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தணிக்கை வாரிய தரப்பு, “மும்பையில் உள்ள தணிக்கை வாரிய தலைவருக்கு புகார் கிடைத்தது. சான்றிதழ் கொடுக்கும் வரை புகார் கொடுத்து யார் என்பதை படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்கக் கூடாது என விதி உள்ளது” என்றார்.

தணிக்கை வாரியத்தை எதிர்த்து தயாரிப்பு தரப்பு தொடர்ந்த மனுவில் ஒரே நாளில் உத்தரவு பெறுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தயாரிப்பு தரப்பு எங்களுக்கும் போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தது. மேலும், அன்றைய தினமே தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததாகவும் பட தயாரிப்பு நிறுவனம் குற்றஞ்சாட்டியது.

தொடர்ந்து மறுஆய்வு குழுவினர் எத்தனை நாட்களில் திரைப்படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவார்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 20 நாட்களில் மறுஆய்வு குழு அமைக்கப்படும். அதன் பிறகு அவர்கள் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவார்கள் என்று தணிக்கை வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்கள் சான்றிதழ் வழங்க மறுத்தால் பட தயாரிப்பு குழு உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்தனர்.

தொடர்ந்து இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன் வைத்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி எம்.எம் ஶ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு ஒத்தி வைத்தது.